புரட்டாதிச்சனி விரதம்
புரட்டாதிச்சனி விரதம்
நம்முன்னோர்களின் செயல்படி இன்பதுன்பங்கள் பாரபட்சமின்றி எமக்களிப்பவள் ஆதிசக்தி. இதனை இவள் நேரடியாக அளிக்காமல் ஈர்ப்புச் சக்தி மூலம் மானிடர்களாகிய எங்களுக்கு அளிக்கிறாள். அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்கிற ஒன்பது கிரகங்களாகும்.
இந்த ஒன்பது கிரகங்களில் இயற்கையாகவும் அவரவர் ஜனன சாதக அமைப்பின்படி இன்ப துன்பங்கள் அளிப்பதற்காக ஏற்பட்ட கிரகம் தான் சனி பகவான். இவர் நவக்கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர். தன் பார்வையினால் தனக்கென்று தனி ஆதிக்கம் பெற்றவர். மற்றைய கிரகங்களைவிட ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்பவர்.
நன்மை அளிக்கும் விடயத்தில் தாராள மனப்பான்மை கொண்டவர். அதே சமயம் அவரவரின் கன்ம வினைப்படி தண்டிப்பதிலும் தலை சிறந்தவர். சனி பகவானின் தந்தை சூரியபகவான். தாய் சாயாதேவி. சனிபகவான் காசி சென்று தன் பெயரினால் ஒரு லிங்கத்தை நிறுவி பூசித்து வழிபாடு செய்தார் என்றும், அதன் பயனாக கிரக பதவியை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. சனி பகவான் கால் வலது குறைந்தவர். நீல நிறமுடையவர். இவரின் வாகனம் காகம். இவர் மேற்கு நோக்கி வீற்றிருப்பார். முடிதரித்திருப்பார். சூலமும், வில்லும், வரதமும், அபயமும் கொண்ட நான்கு கரங்கள் உடையவர். கறுப்பு மலரையும் நீலநிற மாலையையும் அணிபவர். இவருக்கு விருப்பமான மலர் வன்னி. இவருடைய அர்ச்சனை மந்திரங்கள் இவருடைய சூரியன் முதலான கிரகங்களாகவும், கணபதி, முருகன், விஷ்ணு, சிவன் முதலிய தெய்வங்களாகவும் திருநாமங்களைக் கூறித் துதிக்கின்றார்கள். எள்ளுக்கலந்த உணவிலும் நல்லெண்ணை விளக்கிலும் மிக விருப்பமுடையவர்.
இவர் ஒர் கருணை வடிவான கருணைக்கடல், காருண்ய மூர்த்தி, பயமற்றவர், விரும்பியவைகளை அருள்வதில் காமதேனுவைப் போன்றவர். இவரைப்போல் கொடுப்பவருமில்லை, கெடுப்பவருமில்லை.
சிவபெருமானை நோக்கி கடும் தவம் இயற்றியதில் சனீஸ்வரனின் திறன் மிகவும் சக்தி வாய்ந்ததாக அமைந்தது. சிவனாலேயே ஈஸ்வரப்பட்டம் பெற்று ஸ்ரீசனீஸ்வரன் என அழைக்கப்படுகிறார். ஸ்ரீ சனிபகவானால் ஏற்படும் தோஷ நிவர்த்திகளுக்கு செய்யப்படும் பரிகாரங்களை மற்றத் தெய்வங்களுக்கு வழிபாடு செய்து போக்க நினைப்பது இயலாத காரியம்.
இராமபிரானின் தந்தை தசரதருக்கு பூவுலகத்தை ஆட்சி செய்தபொழுது மழை இன்மையால் பன்னிரண்டு ஆண்டுகள் உயிருள்ள பிராணிகள் அனைத்தும் பட்டினியால் மடிந்து விடும் என்றும் சர்வலோகங்களும் அழிந்துவிடும் என்றும், தேவர்கள்ம், அசுரர்கள் அச்சத்தால் நடுங்கினர். தசரதர் சனி பகவானை பிராத்தனை செய்துஇ பூசை செய்து சனிபகவானின் நல்லருள் பெற்று கஷ்டங்கள் வராது நல்ல மழை பெய்து இன்னருள் பெற்றார். இதனால் சந்தோஷமடைந்த தசரதர் சனிபகவானைக் குறித்து துதிப்பாடல் ஒன்றைப் பாடினார். அதனில் மகிழ்ந்த சனிபகவான் மனம் மகிழ்ந்து இத்துதிப்பாடலை பாடித்துதிப்பவர்களுக்கு தன்னால் துன்பங்கள் வரமாட்டாது எனக் கூறி உள்ளார்.
“த்வியா க்ருதம் துயஸ் தோத்ரம் ய! படேதி ஹ மாகவ ஏக வாரம் த்வி வாராம் வரபீடாம் முஞ்சாமிதஸ்யவை”
இம்மந்திரம் தினந்தோறும் காலை மாலை இரண்டுமுறை தோத்தரித்தால் சனிபகவான் மூலம் வரக்கூடிய கஷ்டங்கள் யாவும் நீங்கும். எல்லா விதமான நன்மைகளையும் பெற்று சந்தோஷ வாழ்வு வாழலாம்.
இந்தியாவில் முக்கிய திருத்தலங்களான காசி விசாலாட்சி கோவிலும் தெற்கே இராமேஸ்வரம் சிவாலயத்திலும் சனிபகவான் உற்சவ மூர்த்தியாகத் திகழ்கிறார்.
ஏழரை நாட்டுச்சனி உள்ளவர்களுக்கும் கிரக நிவர்த்தி நீங்கவும் சனிபகவானின் திவ்ய அருட்கடாட்சம் பெறவும் அனைத்து கிரக தோஷங்கள் விலகவும் பலமூலிகைகளால் சனிபகவானுக்கு ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பூசித்தால் சனிபகவான் எல்லா நிவர்த்தியும் செய்து தருவார். தம்மை நம்பி வழிபடும் பக்தர்களைக் காத்தும் முறையிடுபவர்களின் தொல்லைகள் தீர்த்தும், தீராத பிணிகளையும் பிறரின் கோபசாபத்தால் ஏற்படும் பாப சாபங்களையும் நிவர்த்தி செய்யும் வல்லமை உடையவர்.
புரட்டாதிச்சனி மகிமை
புரட்டாதிமாதம் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைத்து விரதமிருந்து ஆலயங்களில் மாவிளக்கேற்றி (பெருமாள் கோயில் முக்கியம்) பெருமாளுக்கு பூசை செய்து அந்தணர்களுக்கு உணவளித்துப் புத்தாடைகள் தானம் செய்தால் சௌபாக்கியங்களுடன் பெருவாழ்வு வாழலாம். தங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து எள்எண்ணை விளக்கேற்றி வழிபடுதல் சிறப்பைத் தரும். புரட்டாதிச் சனிக்கிழமைகள் சனிபகவானைப் பூசிப்பதற்கு மிகவும் சிறப்பு மிக்கதும் சக்தி வாய்ந்ததுமான நாளாகும். என்று வேதம் கூறுகின்றது.
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த பொழுது புரட்டாதி மாதச் சனிக்கிழமைகளில் சனிபகவானைத் துதித்து விரதமிருந்து ஒவ்வொரு சனியும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றிப் பிராயச்சித்த பூசை செய்து வழிபட்டு மீண்டும் நாடு நகர் சென்று அரசாட்சி புரிந்து சந்தோஷ வாழ்வு வாழ்ந்தார்கள் என நூல்கள் கூறுகின்றன.
சனிதோஷமுடையவர்களாயினும் சரி சனிதோஷமில்லாதவர்களும் புரட்டாதி மாத சனிக்கிழமைகளில் விரதமிருந்து பூசித்து காகத்துக்கு அன்னமிட்டு வழிபாடு செய்தால் நிச்சயமாக சனிபகவான் நல்லருள் புரிந்து பொதுப்பேறுகளுடன் மங்களமாக வாழவைப்பார்.
சனித்தோஷத்தால் துன்பத்துக்குள்ளாகிய ஒருசில முக்கியஸ்தர்கள்
1. பாண்டவர்கள் நாடு நகர் இழந்து வனவாசம் சென்று பஞ்சாய் பறந்து சொல்லொனாத் துன்பமடைந்தார்கள்.
2. அரிச்சந்திர மகாராசன் நாடு நகர் இழந்து மனைவி மகனை விற்றுச் சுடலை காத்து மிகவும் துன்னத்துக்குள்ளானார்.
3. 1008 அண்டங்களையும் 108 யுகங்களையும் அரசாட்சி செய்வதற்கு வரம் பெற்ற சூரன் அழிந்தொழிந்தான்.
4. மண்டலத்தை ஆண்ட நளச்சக்கரவர்த்தி மனைவியுடன் கானகம் சென்று சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்தார்.
5. இலங்கைவேந்தன் இராவணன் பெண்ணாசையால் இராமபிரானால் அழிந்தான்.
6. சந்திரன் காலை இழந்து தேய்பிறை ஆனான்.
7. சங்கரன் (சிவன்) ஓடேந்திப் பிச்சை எடுத்தான்.
8. திரௌபதையின் துகில் அரசசபையில் உரியப்பட்டது.
9. சீதை இராவணனின் சிறையில் வாடினாள்.
10. சிவனை விட்டு உமையவளைப் பிரியவைத்தார்.
11. அப்பரைக் கருங்கல்லில் கட்டிக் கடலில் போடவைத்தார்.
இன்னும் எண்ணற்றவர்களை சனிதோஷம் படாத பல கஷ்ட துன்பங்களினால் பஞ்சாய்பறக்க வைத்தது. விநாயகருக்கு மட்டும் சனிதோஷம் பிடிக்க இடமளிக்வில்லை. சனிபகவான் எவ்வளவு முயற்சித்தும் பிள்ளையாரைத் தொட முடியவில்லை.
கதை
ஒருநாள் சனிபகவான் பிள்ளையாரிடம் வந்து இன்று உங்களைப் பிடிக்கப் போகிறேன் என்றார். அதற்குப் பிள்ளையார் அப்படியா? சரி இன்று எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது, நாளைக்கு வந்து பிடிக்கவும் என்றார். சனிபகவான் சரி நாளைக்கு வருகின்றேன் எனக்கூறிப் புறப்பட்டார். உடனே பிள்ளையார் அவரைக் கூப்பிட்டு நான் மறந்து விடுவேன். நாளைக்கு வருகிறேன் என்று தனது முதுகில் எழுதும் படி முதுகைக் காட்டி நின்றார். சனிபகவான் நாளைக்கு வருகிறேன் என்று பிள்ளையாரின் முதுகில் எழுதி விட்டுச் சென்றார்.
அடுத்தநாள் பிள்ளையாரைப் பிடிக்க பிள்ளையாரிடம் வந்தார். பிள்ளையார் முதுகைத் திருப்பிக் காட்டுவார். நாளை வா என இருக்கும் அவர் போய்விடுவார். இப்படிப் பலநாட்கள் நடந்தன். கடைசியில் சனிபகவான் ஏமாற்றம் அடைந்து பிள்ளையாரை சத்திய வாக்குக்கு மாறாகப் பிடிக்க முடியவில்லை. எனவே சனிபகவானின் தோஷத்துக்கு அகப்படாதவர் பிள்ளையார் ஒருவர்தான்.
நல்லது, கெட்டது, சுகம், துக்கம், தாழ்வு ,வறுமை போன்றவற்றை அழித்து பரிபாலிப்பது சனீஸ்வர மூர்த்தி எனலாம். சூரியன் கன்னி ராசியில் வரும் மாதமாகிய புரட்டாதியில் புரட்டாதிச்சனி விரதம் அமைகிறது.
பெரும்பாலான மக்கள் எல்லாம் வாழ்க்கையில் வளத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டுமென்பதற்காக புரட்டாதிச்சனி விரதம் நோற்று சனிபகவானுக்குரிய அர்ச்சனை பூசைகள் செய்வார்கள். சனிபகவானுடைய தண்டனைகள் இல்லாமல் அவனுடைய அருட்கடாட்சத்தைப் பெறுவார்கள்.
உலகில் சனிபகவானின் தண்டனைக்கு ஆளாகாதவர்கள் மிகக் குறைவு. எனவே தான் சனிபகவானின் வணக்கத்துக்கு என்று புரட்டாதி மாத சனிக்கிழமைகளில் ஆலயங்களில் விஷேட பூசைகள் நடைபெறும்.
சனிபகவானின் பார்வைக்கு சிறியவர்கள் பெரியவர்கள் என்ற பாகுபாடில்லை. தண்டனை கொடுக்கவேண்டியவர்களுக்கு கொடுத்தே தீருவார்.
நிடத நாட்டு மன்னன் ஒரு நாள் தனது பாதங்களைக் கழுவும்போது புறங்கால் (குதிக்கால்) நனையவில்லை. அதனைச் சாட்டாக வைத்து நளனைப் பற்றிக்
கொண்டார் சனிபகவான். நளமகாராசன் நாடிழந்து மனைவியுடன் கானகம் சென்ற பின் மனைவியையும் பிரிந்து சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்தான்.
எமது வினைப்பயனின்படி கிரகபலன்கள் நிகழ்கின்றன. கிரகங்களின் இயக்கத்துக்கு இறைவனே காரணம். கோளாறு பதிகம் பாடி இறைவனையும் சனிபகவானையும் வணங்கினால் எல்லாம் நல்லனவாக அமையும். சம்பந்தப் பெருமான் பாடியருளிய கோளாறு பதிகம் சனிபகவானின் பார்வையில் இருந்து விடுபடுவதற்கு ஒரு அருமருந்தாக அமைந்துள்ளது. சனிதோஷம் காரணமாக அல்லல் படுபவர்கள் ஒவ்வொரு நாளும் நம்பிக்கையோடு கோளாறு பதிகம் பாடி இறைவனை வணங்கினால் நிச்சயம் சனி பார்வையில் இருந்து விடுதலை பெறலாம். இது அருளாளர்களின் திருவாக்காகும்.
இறுதியாக இறைவனையே சனீஸ்வரன் பிடித்த கதை. நாரதர் சனீஸ்வரனிடம் நீ இந்த உலகத்தில் எல்லோரையும் ஆட்டி அலைக்கிறாய். எங்கே சிவனை ஆட்ட முடியுமா? என்று கூற சனீஸ்வரன் சிவனைப் பிடிக்கப் போனான். பெருமான் எல்லாம் அறிந்தவர். இறைவனல்லவா, இறைவன் தண்ணீர் தடாகத்தில் குளித்துக் கொண்டு நின்றார். சனி வருவதைக் கண்டு தண்ணீருக்குள் அடியில் சிலநிமிடங்கள் மறைந்து விட்டார்.
சனிபகவான் நாரதரிடம் கைகொட்டி, எங்கள் சிவனையே தண்ணீருக்குள் அமிழ்த்தினேனென்றால் என் திறமையை அறிந்தீர்களா? என்று சனி பகவான் கூறினார் என்பது கதை.