வரவேற்கிறோம் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்
EMAIL US AT svs.vinayagar@live.nl
CALL US NOW +31 223 620 313
DONATE NOW

பிரதோஷ விரதம்

பெருமை மிகுந்த பிரதோஷ விரதம்.

பெருமை மிகுந்த பிரதோஷ விரதம்.

சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள் தரும். மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் வளர் பிறை தேய்பிறை என்னும் இரண்டு காலங்களிலும், திரியோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். இந்த வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம். பிரதோஷ வேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர் . பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர் . கல்வியில் மேன்மை பெறுவர் .

“ நந்தியம் பெருமான் தன்னை நாடொறும் வணங்குவோருக்கு
புந்தியில் ஞானம் சேரும், பொலிவுறு செல்வம் கூடும்
குலமுறை தழைத்தே ஓங்கும். குணம் நிறை மக்கள் சேர்வர்
சிந்தையில் அமைதி தோன்றும். சிறப்புறும் வாழ்வுதானே.”

என்ற பாடல் பிரதோஷ மகிமையை வலியுறுத்தும்.
பிரதோஷ வேளையில் அனைத்து தேவர்கள், முனிவர் கள், சிவாலயத்தில் ஒன்று சேர்வதால் பிரதோஷ வழிபாடு அனைத்துக் கடவுள்களையும் ஒன்றாக வழிபட்ட புண்ணிய பலனை வழங்கும்.

பிரதோஷ வரலாறு

முன்னொரு காலத்தில் மரணமில்லாத வாழ்வைத்தரும் தேவாமிர்தத்தினை பெறுதல் வேண்டி தேவர்களும், அசுரர்களும், ஒருங்கிணைந்து திருப்பாற்கடலை கடைந்தார்கள். வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மந்தரமலையை மத்தாகவும் பயன்படுத்தினர் . அப்போது வாசுகி பாம்பு விஷத்தை உமிழ்ந்தது. அனைவரும் அஞ்சி நடுங்கும் அளவில் பாற்கடலில் ஆலகால விஷம் தோன்றியது. அது அனைவரையும் எரித்து துன்புறுத்தியது. இதனால் அஞ்சி ஓடிய தேவர்கள் “தேவதேவா! மகாதேவா! அருட்கடலே சரணம். கருணைக்குன்றே காத்தருள வேண்டும்”என்று ஓலமிட்ட வண்ணம் இடமாகவும், வலமாகவும், இடவலமாகவும் சிவன் சந்நிதியில் ஓடி சிவனை தஞ்சமடைந்தனர் .

தேவர்களின் துயர் போக்க எண்ணிய சிவபெருமான், சுந்தரரை அனுப்பி அக்கொடிய விஷத்தை கொண்டுவரப் பணித்தார் . அவர் கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி, உருட்டி கொண்டு வந்து சிவபெருமானிடம் கொடுத்தார் . அந்த நஞ்சினை அவர் அமுதம் போல் உண்டார் . அந்த விஷம் சிவனின் உடலுக்குள் சென்றதால், உலக உயிர்கள் அழிந்துவிடும். அதனால் உண்ணாமலும் உமிழாமலும் கண்டத்தில் நிறுத்திக் கொண்டார் . இதனால் நீலகண்டர் என்ற பெயர் பெற்றார் .

தேவர்கள் சிவனின் அனுமதியுடன் மீண்டும் பாற்கடலை கடைந்த போது அமிர்தம் தோன்றியது. அதை உண்டு ஆனந்தம் அடைந்தனர் . அமிர்தம் உண்ட தேவர்கள் வேண்டுதலுக்கு இணங்க, சிவபெருமான் திருநடனம் புரிய முன்வந்தார் .

சரஸ்வதி வீணை வாசித்தாள். இந்திரன் புல்லாங்குழல் ஊதினான். பிரம்மன் தாளம் போட்டார் . லட்சுமி தெய்வீக பாடல்கள் பாட, திருமால் மத்தளம் வாசித்தார் . தேவர்கள், முனிவர்கள், யட்சர்கள், கின்னரர்கள், திசைபாலகர்கள் முதலிய அனைவரும் வந்து பிரதோஷ காலத்தில் இறைவனை வழிபட்டனர் . சிவபெருமான் உமாதேவியார் காண நந்நிதேவரின் இருகொம்புகளுக்கு இடையே திருநடனம் புரிந்தார் . சிவபெருமான் தேவர்களுக்கு திருநடனத் தரிசனம் கொடுத்தது சனிக்கிழமை மாலை நேரத்தில் (பிரதோஷ வேளையில்) ஆகும். எனவே சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் விசேஷமானதாக கருதப்படுகிறது.

விரதமுறை

பிரதோஷ விரதம் இருக்க விரும்புகிறவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஒன்றில் வரும், சனிக்கிழமை பிரதோஷ நாளாக பார்த்து இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் நீராடி காலைக் கடன்களை முடிக்க வேண்டும். சிவன் கோவிலில் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி, சிகப்பு அரிசி நைவேத்தியம் செய்ய வேண்டும். நெய்விளக்கு வைத்து வழிபடுவது நல்லது. முதலில் சிவபெருமானையும், ரிஷப (நந்தி) தேவரையும் வணங்க வேண்டும். பின்னர் இடமாக (பிரதட்சணமாக) சென்று சண்டிகேசுவரரை வணங்கி விட்டு சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் சிவன் நந்தியை தரிசிக்க வேண்டும். வழக்கம் போல் ஆலயத்தை வலமாக சுற்றிவரும் போது, நந்தி தேவரிடம் வந்து நின்றபடி அவருடைய கொம்புகளுக்கு நடுவே சிவலிங்கத்துக்கு தீபாராதனை காட்டுவதை கண்டு வழிபட வேண்டும். இதுமாதிரி மூன்று முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

பின்னர் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி வலம் வரும்போது, உடன்சென்று பிரதட்சணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும். விபூதியை நெற்றியில் அணிந்து கொண்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பயன்படுத்தப்பட்ட புனிதநீரை அருந்த வேண்டும். வீட்டுக்குச் சென்று யாராவது ஏழைக்கு அன்னதானம் வழங்குவதும் நன்மை அளிக்கும்.

மகா பிரதோஷம்

சிவபெருமான் விஷம் உண்ட தினம் கார்த்திகை மாதம் திரியோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும் திரியோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் மகாபிரதோஷம் ஆகும். மாசி மாதம் வரும் மகாசிவராத்திரிக்கு முன்னர் வரும் பிரதோஷமும், மகாபிரதோஷம் எனப்படும். அன்று சிவதலங்களில் வழிபாடு செய்வது சிறப்பானது.

சனிப்பிரதோஷ வழிபாடு செய்தால் ஐந்துவருடம் தினமும் ஆலயம் சென்ற பலன் கிட்டும். மேலும் பஞ்சமகா பாதகங்களினால் ஏற்படும் பாவங்களைத் துடைத்து நன்னெறி அடைய சனி மகாபிரதோஷம் துணைபுரியும்.