நவராத்திரி விரதம்
நவராத்திரி விரதம்
உலகனைத்தும் உய்யவேண்டி, சிருஸ்டி முதலான கிருத்தியங்கள் செய்தருள்புரியும் பரம்பொருளாம் சிவபெருமான், ஆன்மாக்கள் மற்றும் பஞ்சபூதங்கள் அனைத்திலும் கலந்து உய்ய, வழிபாடு செய்யும் அருள் வடிவமே அம்பிகை ஆகும். அம்பிகை அனைத்திலும் வியாபித்துக் கருணை செய்பவள். இந்த வியாபக சக்தியை, அணிமா முதலான அஷ்டமூர்த்தமாகவும், ஆற்றல், அருள், அறிவு, வீரம், செல்வம், கல்வி அனைத்தும் தரும் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியாகவும் வழிபடும் காலமே நவராத்திரியாகும்.
ஒரு மனிதனை பூரண மனிதனாக்குவது வீரம், செல்வம், கல்வி என்பவையாகும். சரஸ்வதியின் திருவருட்கடாட்சமே அம்பிகை வாசம் செய்யுமிடங்கள்.
“நாடிப்புலங்கள் உழுவார் கரமும் நயவுரைகள் தேடிக்கொளிக்கும் கவிவாணர் நாவும் செழுங்கனென ஏடிப்பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவந்து நடம் ஆடிக்களிக்குமயிலே உன்பாதம் அடைக்கலமே”
அவனின்றி அணுவும் அசையாது என்பர். அந்த அவனாகிய சிவத்தையே அசைத்து இயங்கும் சக்தியாக உமையவள் இருக்கிறாள், என்ற எமது நம்பிக்கையின் மூலம், தாய்மையின் பெருமையை தெளிவுறுத்துகின்றது நமது சைவநெறி.
வெற்றி தரும்போது விஜயலட்சுமியாகவும், தைரியம் தரும்போது தைரியலட்சுமியாகவும், தனம் தரும்போது தனலட்சுமியாகவும், பயிர்கள் செழிக்கும்போது தான்யலட்சுமியாகவும், மற்றும் கஜலட்சுமி, ஆதிலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி இப்படியாகப் பல நாமங்களுடன் தேவியார் அழைக்கப்படுகின்றாள்.
உலகில் காணப்படும் பஞ்சபூதங்கள் அனைத்தையும், தாய்மை நிறைந்த தன்மையுள்ளவை எனத் தெய்வீக வார்த்தைகளால் அழைக்கப்படுகின்றன.
ஆகாயத்தை ஆகாயவாணி என்றும், பூமியை பூமாதேவி என்றும், தண்ணீரைக் கங்காதேவி என்றும் பிறந்த நாட்டை தாயகம் என்றும், நதிகளைக் கங்கா, யமுனா, சரசு என்றும் அழைத்து மகிழ்கிறோம் வணங்குகின்றோம்.
மூன்று சக்திகள், இச்சாசக்தி, ஞானாசக்தி, கிரியாசக்தி இலட்சுமி அட்டலட்சுமியாக சகல அட்ட ஐஸ்வரியங்களையும் அளிக்கிறாள்.
கிரியா சக்தி துர்க்கை அம்பிகை இவளும் பல நாமங்கள் கொண்டவள். காளி, வீரமாகாளி, நீலி, திரிபூலி எனப் பலவகைப்படும். துர்க்கை வழிபாடு கன்னிப் பெண்களுக்கு சிறந்த வழிபாடாகும்.
ஞானசக்தி கல்விக்குத் தலைவி. இவள் நாமங்கள் கலைமகள், கலைவாணி, சரஸ்வதி. இவள் இருக்கும் இடங்கள் பல.
பல நாமங்களுடன் அருட்பொலிவுடன் விளங்கி நிற்கும் ஆதிபராசக்திக்கு, அம்பிகை வழிபாட்டுக்கு உகந்த நாள், நவராத்திரி ஒன்பது நாட்களாகும். இந்துக்களுக்கு நவராத்திரித் திருநாட்கள் பொன்னான பெருநாட்களாகும்.
நவராத்திரி என்பது அம்பிகையின் வழிபாட்டுக்குரிய ஒன்பது இரவுகளாகும். சிவனுக்கு சிவராத்திரி ஒரு இரவு. அம்பிகைக்கு நவராத்திரி ஒன்பது
இரவுகளாகும். இந்த இரவுகள் புரட்டாதி மாதம் அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை ஒன்பது நாட்களும் நவராத்திரி இரவுகளாகும். பத்தாவது நாள் விஜயதசமி பூசை நடைபெறும். இந்த விஜயதசமி என்பது, பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது தங்களுடைய ஆயுதங்கள் எல்லாவற்றையும், ஒர் வன்னிமர விருட்ஷத்தின் கீழ் புதைத்து வைத்துவிட்டு சென்றார்கள். பின் வனவாசம் முடிந்தவந்து, இந்த ஆயுதங்களை அர்ச்சுணன் (விஜயன்) எடுத்து யுத்தம் புரிந்த நாள்தான் விஜயதசமி என அழைக்கப்பட்டு வருகிறது.
நவராத்திரி ஒன்பது நாட்களையும் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டு, முதல் மூன்று நாட்களும் வீரக்கடவுள் துர்க்கை அம்பிகைக்கும், நடுப்பகுதி மூன்று நாட்களும் செல்வக் கடவுளாகிய மகாலட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்களும் ஞானக் கடவுள் சரஸ்வதிக்கும், விழா எடுத்து வழிபாடு செய்யும் நாட்களாகும். இந்த மூன்று செல்வங்களை, நன்மக்களைப் பெறும்பொருட்டு, இறைவழிபாடு செய்வதே நவராத்திரி விரதத்தின் நோக்கமாகும்.
துர்க்கை அம்பாள் அவதாரமென்பது இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி அம்பிகை, இலட்சுமி, சரஸ்வதி மூவரும் சேர்ந்த அவதாரம் தான் துர்க்கை அம்பிகை அவதாரமாகும். முதல் மூன்று நாட்களும் துர்க்கை அம்பிகைக்கு நடைபெறும் பூசை மிகவும் மகத்துவம் நிறைந்த பூசையாகும். இந்தப்பூசை வீரம், செல்வம், ஞானம் (கல்வி) மூன்று சக்திகளையும் அடக்கி நிற்கும் பூசையாகும்.
துர்க்கை அவதாரத்தின் காரணம், தேவர்களுக்கும்இ,பூவுலகமக்களுக்கும் சொல்லொனாத் துன்பங்களைக் கொடுத்துவந்த அசுரர்களின், சொல்லொனாக் கொடுமைகளை எல்லாம் தாங்க முடியாத நிலையில், எல்லோரும் இறைவனிடம் சென்று, அசுரர்களின் துன்புறுத்தல்களிலிருந்து தங்களைக் காத்தருளும்படியும், விடுதலை அளித்து, நல்வாழ்வு அளிக்க வேண்டுமென வேண்டிநின்றார்கள். இதன் காரணமாக, அசுரர்களின் தலைவனும், பல கொடுமைகளைக் கொடுப்பவனுமாகிய மகிடாசூரனை அழிப்பதற்கு, துர்க்கை அம்மனாக அவதாரமெடுத்து மகிஷாசூரனைச் சங்காரம் செய்த வீரத்தாய் தான், துர்க்கை அம்பாள் அவதாரமாகும்.
துர்க்கை அம்பிகையை முதல் மூன்று நாட்களும் பூசித்து வழிபாடு செய்தால், உறுதியான உன்னதத்துணிவுடன், வீரத்துடன், சகல சக்திகளும் பெற்று, தீர்க்க ஆயுளுடன், சந்தோஷ வாழ்வு வாழலாம். மனவலிமையையும், எதையும் தாங்கும் சக்தியையும் பெற்று, வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு முன்னேற, துர்க்கை அம்பிகையின் அருள் துணைபுரியும். வீரத்தின் உறைவடமாய் போற்றப்படும் துர்க்கையின் திருவருளினால், அச்சம் அவதி நீங்கி, அமைதியாக வாழ மனவலிமையும் தரவேண்டும் என்று, நவராத்திரி முதல் மூன்று நாட்களும் துர்க்கையை வேண்டி விரதமனுஷ்டிப்பதாகும்.
முட்டவரும் கொடிய வினைகள் எட்டி விலகிடவும், போட்டி பொறாமைகள் பூண்டோடு அழிந்திடவும், வாட்டம் நீங்கி வாழ்வில் மலர்ச்சியும் எழுச்சியும் நிலைபெற்றுவிடவும், கருணை கிட்டிட வேண்டுதல் செய்வது, விரதத்தின் வெற்றியின் உறைவிடமான, துர்க்கை அம்மனின் வழிபாடாக அமைகிறது.
சித்திரை மாதத்தில் வளர் பிரதமை தொடங்கி, ஒன்பது நாட்களுக்கு, அம்பிகையை பூசித்து, விரதமிருக்கும் முறை, வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படும்.
தேவி மகிஷாசூரனை அழிக்கும் பொருட்டு விரதமிருந்த ஒன்பது நாட்கள், நவராத்திரி என்றும், அசுரரை வென்றதினம் விஜயதசமி என்றும் அழைக்கப்படுகிறது.
தேவியின் பூசையால், விட்டிலுள்ள தீயசக்திகள் விலகிவிடும். இளம் பெண்களுக்கு, கலைகளிலும் அழகிலும் சிறந்த கணவன்மார்கள் கிடைப்பார்கள். மணமான சுமங்கலிப் பெண்களுக்கு, தீர்க்கமான நிறைவான குடும்ப வாழ்க்கையும், மக்கட் பேறும் கிடைக்கும். இது துர்க்கை வழிபாடாகும். அடுத்த நடுப்பகுதி மூன்று நாட்களும், செல்வக் கடவுளான மஹாலட்சுமியை பூசித்து, வறுமை தரித்திரம் இன்றி வளமான வாழ்வு வாழலாம்.
“அருளில்லார்க்கு அவ்வுலகில்லை பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை
இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்”
என்ற அருள்மொழிக்கிணங்க இங்கு வாழ்வதற்குப் பொருட்செல்வம் மிகமிக அவசியம். இல்லையேல் எம்மை எவரும் மதிக்க மாட்டார்கள்.
பீடை, பிணி, துன்பம், பயம் இவைகள் அனைத்தும் குடி கொண்டு வறுமையில் உளரவேண்டி நேரிடும். எனவேதான் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை வழிபாடு செய்து, அம்பிகையின் திருவருட்கடாட்சத்தினால், சகல செல்வம் யோகம் மிக்க பெருவாழ்வு வாழலாம்.
“தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சினில் வஞ்கமிலா இனம் தரும் நல்லனவெல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமிகடைக் கண்களே.”
மகாலட்சுமியின் கருணை, அமுதப் பெருக்கு என்பார்கள்.
மூன்றாம் பகுதியாக, கலைகளுக்கரசியான ஞானத்தாய் சரஸ்வதி கடாட்சமிருந்தால், அறிவாற்றல் மிகுந்த மனிதனாகவும், கீர்த்தி, புகளுடையவனாகவும், ஞானவானாகவும் வாழமுடியும். உதாரணமாக அரசனுக்குத் தனது நாட்டில் மட்டும் மதிப்புண்டு. சிறப்புண்டு,வீரமிருக்கலாம், செல்வமிருக்கலாம், ஆனால் ஞானம் எனும் அறிவில்லாலிட்டால் அவன் மிருகத்திற்குச் சமனாவான். கல்வியறிவு இருந்தாலும் நற்குணங்கள், ஒழுக்க நெறிகள் இல்லையானால் அவனது கல்வியறிவால் எவருக்கும் பயனில்லை.
“பற்பல நூல் கற்றுணர்ந்த பண்டிதனே ஆனாலும் நற்குணங்கள் எள்ளளவும் நன்னாத – துர்க்குணனை முற்ற வெறுக்க முடிமேல் மணியிருந்தென் புற்றரவைக் கிட்டார் புகுந்து.”
மகிடாசூரனுக்கு வலிமை வீரம் இறைவியினால் வழங்கப்பட்டது. அசுரசக்தி என்பது தனியே உற்பத்தியானதல்ல, இறைவனால் வழங்கப்பட்டது. ஆக்கசக்தி அவனுடைய அறிவின்மையால் ஆணவசகதியாய் மாறியது. அது அம்பிகையின் அழிவுசக்தி மூலம் அழிக்கப்பட்டது. அன்னையின் அருட்சக்தி எனவேதான் ஞானம் எனும் கலை அரசியின் அருட்கடாட்சமாகவும் வேண்டும். வாணி அம்பிகையின் அருளுண்டேல் யாவராலும் மதிக்கப்படுவர்.
“வெள்ளைக் கலை உடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை அரியாசனத்தில் அரசரோடெம்மைச் சரியாசனம் வைத்த தாய்”
எங்களுக்கு இறையருள் காரணமாக, செல்வம், வீரம், ஞானம் கிடைத்து, சந்தோஷவாழ்வு வாழும்காலம், ஆணவச் செருக்கேற்பட்டால், அசுரர்கள் அழிக்கப்பட்டது போல், எல்லாவற்றையும் இழக்க நேரிடும். அழிவு ஏற்படலாம், அதிலிருந்து மீழ்வதற்கு கலை வாணியின் ஞானம் எனும் நுண்ணறிவு வேண்டும்.
“அறிவற்றவர்களிடம் இருக்கும் பணம், அணுகுண்டை விட பயங்கரமானது’
கடைசி ஒன்பதாம் நாள் ஆயுத பூசை நாளாகும். விஜயதசமி ஒவ்வொரு நாளும், தாம் தாம் செய்யும் தொழில்களுக்குரிய ஆயுதங்களை, தேவி முன் பூசையில்வைத்து வணங்கி அம்பாளின் ஆசியைப் பெறுவதாகும்.
ஓன்பது நாளும் விரதம் நோற்றவர்கள், இந்தக் கடைசி ஒன்பதாம் நாள், அம்பாளைப் பூசித்தால், புரட்டாதி ஒரு மாதமும் தேவியை வழிபாடுசெய்த பலனைப் பெறுவர். நவராத்திரி ஒன்பது நாட்களும், அம்பிகை சனீஸ்வரனுக்கு இரவு நேரப்பூசையை மேற்கொள்கிறாள். பரிபூரணம் அடைகின்ற தினம் விஜயதசமி. நவராத்திரியின் முக்கிய பூசையாக விஜயதசமி முடிவடைகிறது. விஜயதசமியில் வாழைமரத்தை பூசித்து, அந்த வாழை நாரில் மாலை தொடுத்து அம்பிகைக்கு சாத்தி குடும்பவளங்களைப் பெற்றனர்.
நவராத்திரி கொலு
நவாத்திரி பொம்மைகளைச் செய்ய, ஒரே கழிமண் மூலப்பொருளாகிறது. ஆனால் கிருஷ்ணராகவும், ராமராகவும், முருகனாகவும், சிவனாகவும், அம்பாளாகவும் பல பொம்மைகள் ஒரே மண்ணில் உருவாகிறது. பரப்பிரமம் பலவகை வடிவங்களை எடுத்து நம்மைக் கரையேற்றுவதை நவராத்திரிக் கொலு உணர்த்துகிறது.
நவராத்திரி விரதம் அனுஷ்டித்து அருள் பெற்றவர்கள்
விசுவாமித்திரர், வசிட்டர், கச்சியப்பர். இந்திரன், இராமபிரான், இவர்கள் அம்பிகை ஆராதனை செய்து பல சக்திகளைப் பெற்றார்கள்.
மகிடாசூரன், பண்டாசுரன், சண்டமுண்டன், ரக்தபிசன், சும்பநிசும்பன் போன்ற எண்ணற்ற அசுரர்களை வதைத்த அம்பிகைக்கு நன்றி தெரிவிக்கும் விழா நவராத்திரி;.
இராமபிரான் நவராத்திரி விரதம் அனுஷ்டித்து இழந்த ராஜ்யத்தையும் மனைவி சீதையையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தனர்.
சிவபெருமான் நவராத்திரி விரதம் அனுஷ்டித்து திரிபுரம் எரித்தவர்.
இந்திரனும் நவராத்திரி விரதம் அனுஷ்டித்து விருந்திரா சூரனை ஒழித்தார்.