தீபாவளித் திருநாள்
தீபாவளித் திருநாள்
தீபாவளித் திருநாள்
இந்துமக்களுக்கு ஒரு புனிதத் திருநாள். ஐப்பசி அமாவாசை தீபாவளி என்றாலே சிறியோர் முதல் பெரியோர் வரை, ஏழை முதல் செல்வந்தர் வரை, அவரவர் வசதிக்கேற்றபடி மகிழ்வுடன் கொண்டாடுவது என்பது யாவரும் அறிந்ததே. இத் தீபாவளித் திருநாள் சிறுவர் சிறுமியர்க்கும் புதுமணத் தம்பதியர்க்கும் பெரும் மகிழ்ச்சியைத்தரும் நாளாகும். புதுமணத் தம்பதிகள் தங்கள் இல்லங்களில், புத்தாடை சரசரக்க, தீபமேற்றி, விழாக் கொண்டாடி வணங்கி பெரியோர்களிடம் ஆசி பெறும்போது, ஒளிமிக்க பிரகாசமான வாழ்க்கையினைப் பெற்று உயர்வடைவதற்கான புனிதத் திருநாளாகும்.
இத்தீபத்திருநாளில் அதிகாலை எழுந்து, ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்து, மஹாவிஷ்னுவையும் வழிபாடு செய்து, பெரியோர்களையும் வணங்கி அவர்களின் ஆசி பெற்று, சாதி, மத, இன பேதமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு பலவகை உணவுப்பண்டங்கள் கொடுத்து உபசரித்து மகிழ்வினைப் பங்குகொண்டு சந்தோஷம் அடையும் நாள்தான் தீபாவளித் திருநாள்.
புராண வரலாறு
இதே நாளில் நரகாசுரன் என்ற அசுரன் தேவர்களை இம்சித்து பெரும் துன்பங்களைக் கொடுத்து வந்தான். அசுரனின் தொல்லைகளைத் தாங்கமுடியாத வேர்கள், காக்கும் தெய்வமாகிய திருமாலிடம் சென்று, அசுரனின் தாங்கொணாக் கொடுமைகளில் இருந்து, தங்களைக் காத்தருள வேண்டுமென்று, தேவர்களின் முதல்வனான இந்திரன் வேண்டியதற்கிணங்க, திருமால் கருடன் மீது எழுந்தருளி, நரகாசுரனுடன் யுத்தம் செய்து, தனது சக்கர ஆயுதத்தால் நரகாசுரனை வதைத்து, தேவர்களைக் காத்து இரட்சித்த நாளே, தீபாவளித் திருநாளாகும்.
தீபாவளித் திருநாளைத் தீபத்திருநாள் என்றும் கூறுவர். வடநாடு முழுவதும் தீபாவளியன்று வரிசை வரிசையாகத் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். வாழ்வு முழுவதும் ஒளிமயமாகத் திகழ வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுதலாகும்.
தீபாவளி நாள் திருமாலுக்குகந்த நாள். இந்த நாளில் தொடங்கப்படும் தீபமானது சிவனுக்குகந்த நாளாகிய திருக்கார்த்திகை நாளில் ஒளி வெள்ளமாக ஜோதி மயமாக முடிக்கப்படுகிறது என்பது, ஹரியும், ஹரனும் ஒன்றே என்னும் அரிய தத்துவத்தை விளக்குவதாகும்.
ஸ்ரீ ராமபிரான் வனவாசம் முடித்து அயோத்தி திரும்பிய தினம் ஒரு தீபாவளித் திருநாள். மஹாபலிச்சக்கரவர்த்தி பூவுலகிற்கு வந்த நாள் ஒரு தீபாவளித் திருநாள்.
பாற்கடலில் தோன்றிய மஹாலட்சுமி திருமாலுக்கு மாலை போடத் தீர்மானித்தாள். இதை உணர்ந்த மகாவிஷ்ணு மறைந்து ஓடினார். மஹாலட்சுமி பின் தொடர்ந்து விடாமல் ஓடினாள். அவனது பாதம் பட்டு எள்ளுச் செடிகள் சிதைந்து எண்ணெய் கசிந்தது. திருமாலைத் தேடி அவருக்கு ஸ்ரீ தேவி மாலையிட்ட நாள் தீபாவளித் திருநாள். அன்று எண்ணெயில் வாசம் செய்வதாக எள்ளுச் செடிக்கு வரமளித்தான்.
அருள் ஞான இருள் விலகி, ஞான ஒளி பரவ தீமைகள் அழிய குடும்பத்தில் மங்களங்கள் பொலிய எல்லோரும் தீபமேற்றி வழிபடும் திருநாளே தீபாவளித் திருநாள். இத்திருநாளை இந்துக்கள் மகிழ்வுடன் கொண்டாடும் பெருநாளாகும்.
“தமஸோமா ஜ்யோதிர்க் கமய மருத்யோர்மா அம்ருதம் கமய”
என்பது வேதமந்திரம். இதன் பொருள் இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்துச் செல் என்பதாகும். இறைவனைப் பிரார்த்தனை செய்து தீபாவளிப் பண்டிகையைக் குதூகலமாகக் கொண்டாடுவோம்.
நரகாசுரன் என்பவன் அருந்தவமிருந்து பரமனை வழிபட்டு, பெரும் வரங்களைப் பெற்று, அவ்வரங்களின் மகிமையால் அகந்தை (ஆணவம்) ஏற்பட்டு, தேவர்கள், பூவுலக மக்கள், முனிவர்கள், ரிஷிகள் எலலோருக்கும் துன்பம் விளைவித்து வந்தான். தேவர்களின் தலைவன் இந்திரனுடன் போர்புரிந்தான். இந்திரன், முனிவர்கள், இரத தேவர்கள் அனைவரும் கிருஷ்ணபகவானிடம் முறையிட்டனர். கிருஷ்ணபகவான் நரகாசுரனைத் தம் (சக்கரத்தால்) சக்கராயுதத்தால் அவன் உடலைப் பிழந்தார். அப்பொழுது நரகாசுரன், கிருஷ்ணபகவானை வணங்கி, நான் செய்த பாவங்களை மன்னித்தருளி, கொடியவனான நான் இறக்கும் இந்நாளை மக்கள் அனைவரும், தொல்லைகள் நீங்கிய மங்களகரமான திருநாளாகக் கொண்டாடி இன்புற வேண்டும், இந்நாளில் என்னை நினைத்து நீராடி புதிய உடைகள் அணிந்து ஆலய வழிபாடு செய்பவர்களுக்கு அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டான்.
பகவானும் அவன் கேட்ட வரத்தை வழங்கி அருளினார். அத்திருநாளே தீபாவளித் திருநாளாகக் கொண்டாடப்படுன்கிறது. நரகாசுரனுக்கு மோட்சம் அருளிய காரணத்தால் பண்டிகையை நரக சதுர்த்தசி என்று கூறுவர்.
தீபாவளி ஒரு மங்களகரமான தீபத்திருநாள். தீயவர்கள் அழியும் நாள். வெளி இருளோடு அக இருளும் அகலும் நாள்.
மகாவிஷ்னுவுக்கும், பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர் தான் நரகாசுரன். பகவானுக்கு மகனாகப் பிறந்த சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக இறைத்தன்மை மாறி அசுரனாகிவிட்டான். தர்மம், நியாயம், நேர்மை இந்த நற்குணங்கள் இருந்தால்தான் மனித நேயத்துடன் வாழமுடியும். இந்த நரகாசுரன் வானவர்களுக்கும் பூவுலக மக்களுக்கும் சொல்லமுடியாத பெரும் துன்பங்களைச் செய்தான். தேவேந்திரன் தாயாரின் குண்டலங்களைப் பறித்தான். கொடுத்த துன்பங்களை எல்லாம் இறைவனிடம் முறையிட்டான்.
இதையுணர்ந்த பரந்தாமன் பாசஉணர்வுகளையும் மீறி, கிருஷ்ண அவதாரம் எடுத்து, மனைவி சத்தியபாமாவுடன் சென்று, அவனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டினார்.
இதிலிருந்து என்ன தெரிகின்றதென்றால் அக்கிரமங்கள் செய்பவர்கள் யாராக இருந்தாலும் இறைவன் அவர்களிடம் கருணை காட்டமாட்டார். அழித்தே தீருவார் என்பதற்குச் சான்று மகன் நரகாசுரன் வதமாகும்.