இந்து சமயக் கலை மரபுகள் திருக்கோவில்களில் பெருமளவு வளர்ச்சியைக் கண்டுள்ளன. கட்டிடம்,சிற்பம், ஓவியம்,இசை,நடனம் எனப் பல்வேறு வடிவங்களில் கலையின் அம்சங்களைத் திருக்கோயில்களில் கண்டு நாம் மகிழ்கின்றோம் .
திருக்கோயில்கள் வழிபாட்டிற்குரிய இடம் மாத்திரமன்றி கலைத்திறன்களை வளர்க்கும் பொது இடமாகவும் விளங்கி வருகின்றன. கோவில்களால் கலைகள் வளர்ந்ததாகவும், கலைகளால் கோவில்கள் வளர்ந்ததாகவும் ஒரு பொதுவான முடிவை நாம் ஏற்கமுடியும். கோவில் வழிபாட்டிற்கு மிகவும் பிரதானமானது இறைவனின் திருவுருவங்களாகும். இத் திருவுருவங்களை அமைக்கும் கலை விக்கிரகக்கலை எனப்படும். இத்திருவுருவங்களை நிறுவுவதற்குத் தேவைப்படும் ஆலயத்தை அமைக்கும் கலை கட்டிடக்கலை எனப்படும்.
கட்டிடக்கலையில் அதிகமான உயரத்தைப் பிடித்திருப்பது கோபுரம் கட்டும் கலையாகும். மூலாயத்தில் உள்ள திருவுருவம் முதல் திருக்கோபுரம் வரைவுள்ள அனைத்திடங்களும் கலை வடிவமாக இருப்பது தான் இந்துசமயத்தின் தனிச் சிறப்பாகும். கோயில்களில் நடைபெறும் கிரியைகள், அங்கு ஓதப்படும் வேதமந்திரங்கள், திருமுறைகள், முழங்கும் மங்கள வாத்தியங்கள், மணியோசைகள் முதலிய யாவும் இசைக்கலை, நடனக்கலைக்கு ஆதாரமாக இருப்பவை என்பது தெளிவாகும். இவ்வாறு இறைவனும் கோவிலும் கலைவடிவமாக இருப்பதை உணரலாம். திருக்கோவிலில் காணப்படும் கட்டிடங்களும் மணிக்கூட்டுக்கோபுரம், விமானம், ராஜகோபுரம் என்பன உயரமானவையாகக் காணப்படும். இவற்றைவிட ஆலயத்தின் நடுவில் காணப்படும் கொடிமரமும் உயரமாக இருக்கும். எங்கும் பரவியுள்ள இறைவனின் திருவருளை ஆலயத்திற்குள் வரவழைக்கும் பணியில் இவ் உயர்ந்த கட்டிடங்களுக்கும் பெரும் பங்களிப்பு உண்டு.
இவ்வுயர்ந்த கட்டிடங்கள் வெறும் கட்டிடங்களாக மாத்திரம் காட்சியளிக்கப் பயன்படவில்லை. சமய வரலாறு, புராணக் கதைகள், தத்துவம் முதலிய பல செய்திகளை எடுத்துக்கூறும் உயிர்த்தன்மை கொண்ட உருவங்களாகவே உயர்ந்துநிற்கின்றன. இறைவனை நோக்கி எமது மனம் உயரவேண்டும் என்ற அரும்பெரும் தத்துவத்தைக் கோபுர தரிசனம் எடுத்துக் காட்டுகிறது. அடியில் அகலமாக இருந்து படிப்படியாக ஒடுங்கிக் கொண்டு போவது கோபுர அமைப்பில் காணப்படும் பொதுவான அம்சமாகும்.
அதி உயரத்திலிருந்து விமானத்தையோ, கோபுரத்தையோ எவன் பார்த்தவுடன் வணங்குகிறானோ அவனுக்குப் பாம்பானது தனது செட்டையிலிருந்து விடுபடுவது போல் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றான் எனச் சுப்பிரபேதாகமம் கூறுகிறது. எமது இரு கரங்களையும் தலைக்கு மேலாக வைத்து குவித்து வணங்கும் போது திருக்கோபுர அமைப்புக்கு ஒத்ததாக அவ்வமைப்பு இருப்பதைப் பொதுவாகக் காணலாம். எமது சக்திக்கு மேற்பட்டவன் இறைவன் என்பதையும், அவனை அடைவதற்கு எமது புலன் ஒடுக்கம் அவசியம் என்பதையும் எடுத்துக் காட்டுவது திருக்கோபுர ஒடுக்கமாகும்.
ஒரு ஆலயத்தின் கோபுரமும், விமானமும் எவ்வளவு தூரத்திற்கு தெரிகிறதோ அவ்வளவ தூரமும் கைலாசப்பிரதேசம் எனப் போற்றப்படும். இதனால்
தென்னாட்டில் பல மன்னர்கள் திருக்கோயில்களில் மிக உயர்ந்த கோபுரங்களைக் கட்டினார்கள். “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” “கோபுர தரிசனம் பாப விமோசனம்” போன்ற ஆன்றோர் வாக்குகள் கோபுர தர்சனத்தால் எமது ஆன்மா பெறும் புனிதத் தன்மையைப் புலப்படுத்துகிறது. கோபுரத்தைக் கண்டவுடன் நிலத்தில் வீழ்ந்து வணங்க வேண்டும் என்ற செய்தியைப் பெரிய புராணப் பாடல் வரி ஒன்று பின்வருமாறு குறிப்பிடுகிறது.
“நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திருவீதியை வணங்கி………..”
எனவே கோபுர தரிசனம் ஒவ்வொரு மனிதனும் கண்டு வணங்க வேண்டியது அவசியமாகும். கோவில் இல்லாத ஊர் அடவிகாடு என அப்பர் சுவாமிகள் எடுத்துரைத்தார். திருக்கோவில் இல்லாத ஊர் எவ்வளவவு செல்வம் நிறைந்த ஊராக இருந்தாலும் திருவில் ஊரே எனவும் அப்பர் சுவாமிகள் மேலும் கூறினார்.
ஊருக்கு அழகு தருவது கோவில் ஆகும். கோவிலுக்கு அழகு தருவது கோபுரம் ஆகும் என்ற நிலையில் பல ஆலயங்களில் கோபுரம் அமைக்கும் பணி பரவி வரவதைக் காணலாம்.
“கோலக் கோபுரக் கோகரணஞ் சூழா கால்களாற் பயனென்”
எனவும் அப்பர் சுவாமிகள் கோபுரச் சிறப்பைப் பற்றிக் கூறுகிறார். “கோகுலக் கோபுரம்” என அப்பர் சுவாமிகள் குறிப்பிடுவதிலிருந்து கலை அம்சம் பொருந்திய சிறப்பினை நாம் கோபுர தர்சனத்தில் காணலாம்.
கோபுரங்களில் என்ற வகையில் மாடங்கள் இருக்கும். இதனால் கோபுரங்களை நெடுமாடம் எனவும் அழைக்கலாம்.
வானளாவிய உயர்ந்த மாடம் உடைய திருமருகல் தலத்தைப் பற்றிச் சம்பந்த சுவாமிகள் தமது திருமுறை ஒன்றில் குறிப்பிடுகின்றார்.
“……….மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்…….”
என வரும் பாடலில் சந்திரனைத் தொடக்கூடிய அளவிற்கு உயரமுடைய மாடம் என்பது அவரது வர்ணனையாகும்.
கோவில்களில் நான்கு திக்குகளுக்கும் நான்கு கோபுரங்களும், நடுவில் ஒரு கோபுரமாகப் பஞ்ச கோபுரங்கள் கட்டலாம் எனச் சிற்ப நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. இவற்றை விட கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கோபுரங்கள் கட்டவும் மானசாரம் என்ற நூல் அறிவுறுத்துகிறது.
பொதுவாக ஒரு சில கோவில்களைத் தவிர இலங்கையில் உள்ள கோவில்கள் யாவும் இரண்டு வீதிகள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் மூன்று முதல் ஏழு வரையான வீதிகள் உள்ளன. ஒரு கோவிலுக்குப் பல கோபுரங்கள் உள்ள கோவில்களும் உள்ளன. தென்னிந்தியாவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்இ சிதம்பரம் போன்ற திருத்தலங்கள் பல கோபுரங்களுடன் காட்சி அளிக்கின்றன.
ஓவ்வொரு வீதியின் வாசலிலும் கோபுரங்கள் அமைப்பது பற்றியும், சிற்ப நூல்கள் கூறுகின்றன. முதலாவது கோபுரம் துவார சோபை எனவும், இரண்டாவது கோபுரம் துவாரசாலை எனவும் மூன்றாவது கோபுரம் துவாரப் பிரசாதம் எனவும், நான்காவது கோபுரம் துவார ஹர்மியம் எனவும், ஐந்தாவது கோபுரம் மஹாமர்யதை எனவு ம் பெயர்பெறும்.
இவ்வைந்தாவது கோபுரமே மஹா கோபுரம் எனவும், ராஜ கோபுரம் எனவும் சிறப்புப் பெயர் பெறுகிறது. பொதுவாக மஹா கோபுரம் எனப்படும் ராஜ கோபுரமே கோவில்களில் காணப்படும்.
கோபுரங்களின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல பெயர்களால் அவை அழைக்கப்படுகின்றன. வல்லீ, கவாஷம், ஸ்வஸ்திகம், நாகபந்தம் சர்வதோபேதம், நந்தியாவர்த்தம், புஸ்பதந்தம் முதலியன சிலவாகும். கோபுரம் என்பதற்கு இறைவனை நோக்கி ஆன்மாக்கள் செல்லும் வழி எனப் பொருள் கூறுவார். கருவறையின் மேல் உள்ள விமானம் சிரசாகவும், கோபுரம் இறைவனின் திருப்பாதமாகவும் கூறப்படும். திருமூலர் திருமந்திரத்தில் பின்வரும் பாடல் ஒன்றின் மூலம் இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பைப் புலப்படுத்துகிறார்.
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம் வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல் தௌ
ள்ளத் தெளிந்தாரக்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே”
இறைவனுடைய ஆலயத்திற்குச் செல்வதற்குச் திருக்கோபுரம் எமக்கு வாசலாக இருப்பது போல் எமது தூய்மையான மனத்திற்குள் இறைவன் வருகை தருவதற்கு, எமது வாய் கோபுர வாசலாக இருக்கும். அதாவது இறைவனது நாமங்களை நாம் மீண்டும் மீண்டும் உச்சரிக்க வேண்டும் என்ற மறைமுகக் கருத்தும் உள்ளது.
கோவிலின் கருவறையில் இருப்பது சூட்சுமலிங்கம் எனவும், ஆலயத்தின் நடுவிலிருப்பது பத்திரலிங்கம் அதாவது பலிபீடம் எனவும், ஆலயத்தின் முகப்பு வாசல் இருப்பது ஸ்தூலலிங்கம் எனப்படும் ராஜகோபுரம் எனவூம் அழைக்கப்படும்.
லிங்கம் என்றால் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமான இடம் எனக் குறிப்பிடப்படும். எமது புலன் ஒடுக்கத்திற்கும் இறையுணர்வின் தோற்றத்திற்கும் காரணமாக ஸ்தூலலிங்கம் முதல் அனைத்து லிங்கங்களும் இடமளிப்பதாக யாம் கருதலாம்.
இவ்வாறு லிங்கங்களுடன் தொடர்புபடுத்தி மேற்படி இடங்களை குறிப்பிடுவது போல் ஆத்மாவோடு தொடர்புபடுத்தி மேற்படி இடங்களை குறிப்பிடுவர்.
கோபுரம் – பூதாத்மா பலிபீடம் – அந்தராத்மா
துவஜஸ்தம்பம் – தத்தவாத்மா லிங்கம் – ஜீவாத்மா
குரு – மந்திராத்மா விமானம் – பரமாத்மா
இவ்வாறு சர்வஞானோத்தர ஆகமம் குறிப்பிடுகிறது.
எனவே இறைவனும் ஆத்மாவும் இணையும் இடமாக ஆலயமும், அங்குள்ள புனித அடையாளங்களும் விளங்குகின்றன என்பதை நாம் உணரலாம்.
ராஜகோபுரம் என்பது மிகப்பெரிய கோபுரம் என்பது கருத்தாகும். உமாபதி சிவாச்சாரியார் கொடிக்கவி என்னும் பாடலில் கோபுர வாசற் சிறப்பினைப் பற்றிக் கூறுகின்றார்.
“பொருளாம் பொருளேது போதேது கண்ணே(து) இருளாம் வெளியே திரவே(து) – அருளாளா நீபுரவா வையமெல்லாம் நீ அறியக் கட்டினேன் கோபுர வாசற் கொடி”
இறைவா நீதான் அனைத்தையும் ஆளும் ராஜா. நீ பாதுகாக்தாத உலகம் எங்குள்ளது. உன் அருள் இல்லாமல் யாம் எதையும் அறிய முடியாது. நீயே எல்லாமாக இருந்து எல்லாவற்றிற்குஞ் சாட்சியாக இருப்பதால் நீ காண உன் கோபுர வாசலில் கொடி கட்டினேன். எனக் கூறுவதைக் காணலாம். எனவே, கோபுரமானது இறைவனே அனைத்தையும் ஆளுகின்ற தன்மை உடையவன் என்பதைக் குறிப்பாக உணரலாம். இதனால் ராஜ கோபுரம் எனக் கூறுவது பொருந்தும்.
கோபுரங்களில் காணப்படும் சிற்பங்கள் புராணங்கள் கூறும் தெய்வீக வரலாற்றையும், ஆலய வரலாற்றையும் உள்ளடக்கியதாக இருப்பதை நாம் கவனிக்கலாம்.
“வரம்பிலின்பமுடையான் தாள் வாழ்த்தி வணங்குவோம்”