வரவேற்கிறோம் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்
EMAIL US AT svs.vinayagar@live.nl
CALL US NOW +31 223 620 313
DONATE NOW

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி துன்பங்களைக் களையும் கிருஷ்ணர் மகிமை.

மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். இறை நிலை, எளிதாக எட்டக்கூடியது. பிறவிப்பயன் தெரியாமல், இறைநிலையை உணர முடியாமல், உழன்று கொண்டிருக்கும் மனிதர்களின் எண்ணங்கள், கிருஷ்ணரைப் பின்பற்றினால் மாறும். அவர் தீராத விளையாட்டுப்பிள்ளை மட்டுமல்ல….. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் ஆனந்தத்துடன் ரசித்தவர். மகிழ்ச்சி வெளியில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியவர். கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடுவதன் நேக்கமே இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

கிருஷ்ணர் கதை

மதுராபுரி மன்னன் கம்சன், தந்தையைச் சிறையில் இட்டு, முடிசூடிக் கொண்ட அரசன். அவனது சகோதரி தேவகி, வாசுதேவரை மணந்தாள். கம்சனின் அழிவு, தேவகியின் எட்டாவது மகனால் நிகழும் என்றது அசரீரியின் குரல். சகோதரி என்றும் பாராமல, தேவகியையும், வாசுதேவரையும் சிறையில் அடைத்து கம்சன் கொடுமைகள் செய்தான். தேவகிக்குப் பிறந்த ஏழு குழந்தைகளைப் பிறந்தபோதே கொன்ற கம்சன், 8வது குழந்தையைக் கொல்வதற்காக காத்திருந்தான். அன்று கொட்டிய மழை, நள்ளிரவு ஊரே உறங்கியபோது, தேவகிக்கு கண்ணன் பிறந்தான். (ஆவணி மாதம் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரம்). சிறைக்காவலர்கள் அசந்து உறங்கிக்கொண்டிருந்தனர். வாசுதேவரைப் பிணைத்திருந்த சங்கிலிகள் அறுந்தன.

கம்சன் ஒன்று நினைக்க, இறைவன் நினைத்ததோ வேறு. கண்ணன் பிறந்த நேரத்தில் சிறைக் காவலர்களோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். சங்கிலியால் கட்டுண்ட வாசுதேவரின் சங்கிலிகள் அறுந்து விழுந்தன. வசுதேவர் குழந்தையைக் கூடையில் பத்திரப்படுத்திக் கொண்டு கிளம்ப, சிறைக்கதவுகள் தானாகத் திறந்தன. கோகுலம் செல்வதற்காக யமுனை நதிக்கரையை அடைந்தபோதுஇ,கரைபுரண்டோடியது வெள்ளம். இறைவனை வாசுதேவர் மகமுருகி வேண்ட, வெள்ளம் இவருக்கு வழிவிடுகிறது. வாசுதேவர் நடக்கத் தொடங்க, அவர் தலையில் அவர் வைத்திருந்த குழந்தையை வாசுகி (பாம்பு) குடை போல பிடித்து பாதுகாக்கிறது.

கோகுலத்தில் வசுதேவரின் நண்பர் நந்த கோபன் அரசனாக இருந்து வந்தார். நந்தனின் வீட்டுக்கு வாசுதேவர் சென்ற போது, நந்தனின் மனைவி யசோதா அப்போதுதான் பிறந்திருந்த தனது பெண் குழந்தை அருகில் இருக்க, தானும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். ஆண் குழந்தையைத் தாய் யசோதை அருகில் விட்டுவிட்டு பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்த வழியே திரும்பி, வாசுதேவர் மதுராபுரி வந்து சேர்ந்தார். அப்போதும் காவலாளிகள் விழிக்கவில்லை. பழையபடி வசுதேவரை விலங்குகள் பூட்டிக் கொண்டன. அப்போதுதான் காவலர்களின் உறக்கம் கலைகிறது.
தேவகிக்கு எட்டாவது குழந்தை பிறந்த செய்தியைக் கம்சனிடம் காவலர்கள் கூறினர். கம்சன் பெண் குழந்தை என்றும் பாராமல் கொல்லத் துடித்தான். தேவகி கதறினாள். இரக்கம் இல்லாத கம்சனோ குழந்தையின் கால்களைக் கையால் பிடித்து சுழற்ற, குழந்தையோ கைகளில் இருந்து கழன்று வானத்தில் பறந்து சென்றது. “கம்சனே….. உன்னைக் கொல்ல அவதரித்த குழந்தை கோகுலத்தில் வளர்கிறது” என்று அசரீரி ஒலிக்கிறது. கோகுலத்தில் பிறந்த குழந்தை எதுவும் உயிரோடு இருக்கக் கூடாது என்று அரக்கி பூதகியிடம் கர்ஜிக்கிறான் கம்சன். ஆனால், இறைவனைக் கொல்ல முடியுமா?. கோகுலத்துக்கு வந்து தேவகியின் குழந்தையை வாங்கி கொஞ்சுவது போல நடித்த பூதகி இறந்துபோகிறாள். இது ஒன்றுமே தெரியாததுபோல், கண்ணன் (கிருஷ்ணன்) சிரித்து விளையாடிக்கொண்டிருந்தான்.

கிருஷ்ண ஜெயந்தி ஏன்?

யசோதையிடம் கிருஷ்ணன் வளர்ந்தான். பால்ய லீலைகளை கோகுலத்தில் நிகழ்த்திக் காட்டினான். கோகுலத்துப் பெண்கள் அவனிடம் அன்பு கொண்டனர். அவனது விளையாட்டுத்தனம் பலரையும் கோபப்பட வைத்தாலும், அவனது மலர்ந்த முகத்தைக் கண்டதும் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது. கிருஷ்ணர் வளர்ந்து பெரியவனாகி கம்சனை வதம் செய்து, பாட்டன் உக்கிரசேனனை சிறையிலிருந்து விடுவித்து அரசனாக்கிவிட்டு, பெற்றோர்களான வசுதேவர், தேவகியிடமும், தன்னை வளர்த்த நந்தன், யசோதையிடமும் அன்புடன் இருந்தான்.
உலகத்தைப் பிடித்திருந்த துன்பங்கள் விலகி, கண்ணனால் ஒளிபெற்றது. அந்தக் குழந்தை பிறந்த நாள் ஜென்மாஷ்டமி. கோகுலாஷ்டமிஇ கிருஷ்ண ஜெயந்திஇ தீமையை அழித்து ஒளியூட்டிய நல்ல நாள். எண்ணங்களே காட்சியாகிறது. இந்திரன் கோகுலத்தை அழிக்க பெரும் மழையை உண்டாக்கிய போது கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து அவர்களை கிருஷ்ணர் காப்பாற்றினார். யமுனை நதிக்கரையில் காலிங்கன் என்ற பாம்பையும் அடக்கினார். இளவயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனத்தில் இடம் பிடித்தார். இவர்களில் ஒருவரான ராதையுடன் காதல் புரிந்தார்.

தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அர்ஜுனனுடன் நட்பு கொண்டார். பின்னர், துவாரகைக்கு மதுராபுரி மக்களுடன் குடிபெயர்ந்தார். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே நடந்த போரில் தனது சேனையை கௌரவர்களிடம் கொடுத்து விட்டு, தான் ஆயுதம் ஏந்தாமல் அர்ச்ஜுனனின் தேரோட்டியாக கிருஷ்ணர் பணிபுரிந்தார். இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ச்ஜுனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது. இதுவே இந்துக்களின் புனித நுhலாக உள்ளது. நாம் எதை எண்ணுகிறோமோ அதுவாகவே காட்சி தருபவரே கிருஷ்ணர். பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்த போது அவருக்கு கிருஷ்ணர் காட்சியளித்தார். முழு ஆயுதபாணியாகக் காட்சி தருகிறார். பீஷ்மர் ஒரு போர்வீரர். அவருக்கு போர்வீரராகவே காட்சியளிக்கிறார்.

களைகட்டும் கொண்டாட்டங்கள்

கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிரஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை படைத்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். தின்பண்டங்களுடன் தயிர் சேர்த்தும், பாலையும் வெண்ணெய்யையும் கலந்தும் பக்தர்கள் “தஹிகலா” என்ற உணவு தயாரிப்பதுண்டு. கிருஷ்ணர் மாடு மேய்க்கும் போது, கோபியர்கள் கொண்டுவரும் சாதங்களையும் கலந்து
உண்பார். அதை இன்னும் பின்பற்றும் விதமாக, தஹிகலா தயாரிப்பது, வெண்ணெய் தாழியை உடைப்பது வழக்கத்தில் உள்ளது. இதுவே உறியடி விழாவாக இன்றம் கொண்டாடப்படுகிறது.

வெண்ணெய் நிவேதனம் ஏன்?

கிருஷ்ணருக்கு வெண்ணெய் நிவேதனம் செய்யப்படுகிறது. கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். வரியைக் கட்ட மக்கள் வெண்ணெய் விற்க வேண்டியதாயிற்று. கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணண் வெண்ணெய் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் மக்கள் சாப்பிடாமல் விரதம் இருந்து நள்ளிரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதம் அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணெய், பால் போன்றவற்றை உண்டு விரதத்தை முடிப்பது வழக்கம்.