வரவேற்கிறோம் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்
EMAIL US AT svs.vinayagar@live.nl
CALL US NOW +31 223 620 313
DONATE NOW

சிவராத்திரி விரதம்

சிவராத்திரி விரதம்

மஹா சிவராத்திரி விரதம்

சிவனுக்கு ஒரு ராத்திரி அம்பிகைக்கு ஒன்பது ராத்திரிகளாகும்.
மாசி மாதம் கிருஷ்ணபட்சம் (அபர பட்சம்) சதுர்த்தசித் திதியில் வரும் ஒரு நாளே சிவனுக்குரிய மஹாசிவராத்திரியாகும். இறைவழிபாட்டுக்குரிய முக்கியமான நாளாகும்.
ஆன்மாக்கள் சிவனிடம் ஒடுங்கி நிற்கின்ற நிலையில் நாம் செயலற்று சிவனையே வணங்குவதுதான் சிவராத்திரி. எம்பெருமானே அறியாமை இருளில் கிடந்த எங்களை மீட்கப் பெறச்செய்தீர். இப்பொழுது நாங்கள் இழைப்பாறுதலுக்காகிய ஒடுக்க நிலையில் இருக்கின்றௌம். எங்களை முழுமையாக அறியாமை இருளிலிருந்து விடுவிக்கவேண்டும் என்று வேண்டுவதே சிவராத்திரி வழிபாடாகும்.
சிவராத்திரி நடு இரவு சிவநிதி எனப்படுகிறது. அருவம், உருவம், அருவுருவம் என மூன்று திருமேனிகளைச் சிவம் கொண்டுள்ளது. சிவலிங்கம் சிவத்தின் அருவத்திருமேனியாகும். லிங்கோற்பவம் நிகழ்ந்த மாசிமாதத்து அபரபக்கச் சதுர்த்தசி திதி நாளே மஹா சிவராத்திரியாகச் சிறப்புப் பெறுகிறது.

மஹாசிவராத்திரி நான்கு சாமமும் சிவலிங்க பூசையும், வழிபாடும் நடைபெற வேண்டும். சிவபூசை வழிபாடு செய்வோர் முதற்சாமத்தின் போது மூலமூர்த்திக்கு பஞ்சகவ்வியத்தினால் அபிஷேகம் செய்து சந்தனக்குழம்பு சாத்தி வில்வம், தாமரை, துளசி முதலியவற்றால் அர்ச்சித்து பயிற்றம் பருப்பு அமுதினை நிவேதித்து பூசை செய்யப்படும்.

இரண்டாவது சாமப்பூசையின்போது பஞ்சாமிர்தத்தினால் அபிஷேகம் செய்து அகில் குழம்பு சாத்தி, வில்வம், தாமரை துளசி முதலியவற்றால் அர்ச்சித்து பாயாச நிவேத்தியம் வைத்து பூசை செய்து வழிபடுவர்.

மூன்றாம் சாமத்தின்போது தேன், அபிஷேகம், பச்சைக் கற்பூரம், சுண்ணம் சாத்தி எள்அன்னம் நிவேதித்து பூசை செய்யவேண்டும்.
நான்காம் சாமம் பூசையின் போது கரும்புச் சாற்றினால் அபிஷேகம் செய்து குங்குமம் சாத்தி வில்வம் நந்தியாவந்தனம் கொண்டு அர்ச்சித்து சுத்த அன்னம் படைத்து பூசை செய்யவேண்டும்.
அணுசக்தியை விட மந்திரசக்தி, யந்திர சக்தி பலம் வாய்ந்தவை. இந்தக்கால அணு ஆயுதங்களிலும் பார்க்க அந்தக் காலத்தில் பாரதப் போரில் இறைவனால் அர்ச்சுனனுக்கு வழங்கப்பட்ட (பாசுபதம்) பிரமாஸ்த்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு நிகழ்வுகளிலும் ஏற்படுகின்ற நம்பிக்கைச் செயற்பாடுகள் இறைசக்தி என்பதை நாம் உணரவேண்டும். நாங்கள் செய்கின்ற உறுதியான இறைவழிபாடு இறை சக்தியை ஈர்த்து எடுக்கின்றது.

மஹாசிவராத்திரி இரவு நாம் கண்விழித்து துயில்கொள்ளாது நான்கு சாமப் பூசையும் கண்டு இறையருள் பெற்று நாங்கள் விரும்புவதை நிச்சயம் இலகுவாய் பெறமுடியும்.
அடிமுடி தேடிச் சென்ற திருமாலுக்கும் பிரமனுக்கும் திருவண்ணாமலையில் அருள் கிடைத்ததும் இதே சிவராத்திரி நாளில்தான். இத்திருநாள் ஆணவம் அகந்தையை அகற்றி சாந்தி, சமாதானத்துக்கு வழிகாட்டும் காலம் மஹாசிவராத்திரிக் காலமாகும். பிரம்மா. விஷ்ணுவின் அகந்தை அடங்கி சிவன் தாழ் சரணடைந்து மனச்சாந்தி பெற்றதும் மஹாசிவராத்திரி நாள் தான். பிரமனும், விஷ்ணுவும் தங்களின் அறியாமையை நினைத்து சிவபெருமானின் ஜோதி வடிவைத் தரிசித்து சிவபெருமானே முழுமுதற்கடவுளென ஏற்றுக் கொண்ட நன் நாளே மஹாசிவராத்திரி நாளாகும்.

சிவராத்திரி விரதச்சிறப்பின் மகிமை

உலகத்துக்குக் கர்த்தாவாகவும், ஏகப்பரம்பொருளாகவும், ஆதி அந்தம் இல்லாதவராகவும் இறப்பு பிறப்பு இல்லாதவருமான முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுக்குரிய மகத்துவம் நிறைந்த விரதம் தான் மஹாசிவராத்திரி விரதம். இந்தச் சிவ விரதம் மற்றைய விரதங்களிலும் பார்க்க அருட்கடாட்சம் நிறைந்த விரதமாகும்.

நாம் நோற்கும் விரதங்கள், செய்யும் பூசைகள், அபிஷேகங்கள், பிரார்த்தனைகள், யாக ஹோமங்கள் யாவும் நேரடியாக முழுமுதற்கடவுளாகிய சிவனைச் சென்றடைவதில்லை. எல்லா நிகழ்வுகளும் தேவர்கள் அட்டதிக்குப் பாலகர்கள் மூலம் தான் சிவனைச் சென்றடைகின்றது. ஆனால் மஹாசிவராத்திரி விரதம் இன்று செய்யும் பூசைகள் அபிஷேகங்கள் யாகங்கள் அனைத்தும் நேரடியாகச் சிவனைச் சென்றடைவதாக அருளாளர்கள் மகான்கனின் கூற்றாக இருக்கிறது.
எங்கள் வேண்டுதல்கள் முறைப்படியானதாக இருப்பின் உடனடியாகப் பலன் கிடைக்கப்படுகிறது. இதன் காரணமாக சிவராத்திரி விரதம் மிகவும் மகத்துவம் மிக்கதாகப் போற்றப்படுகிறது. சிவராத்திரி விரதத்தை மக்கள் விரும்பி அனுஷ்டித்து வருகிறார்கள்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை

மஹாசிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பவர்கள் பெரும்பாலும் வாழ்க்கை பூராகவும் உள்ளத் தூய்மை உடையவராகவும் சிவராத்திரிக்கு மூன்று நாட்கள் முன்பாகவே அசைவ உணவுகளை நீக்கி ஆசார சீலராக வேண்டும். உபவாசம் மேற்கொள்பவர்கள் சிவராத்திரி முதல் நாள் மாலை ஸ்நானம் செய்து புனிதராகி தூய வஸ்த்திரம் தரித்து கண்கண்ட தெய்வங்களான பெற்றோரை வணங்கி அவர்களின் பாதாரவிந்தம் பணிந்து ஆசீர்வாதம் பெறுதல் வேண்டும். அதன் பின் சுவாமி அறையில் தீப தூப ஆராதனை செய்து மலர் கொண்டு அர்ச்சித்து விநாயகப் பெருமானை வணங்கி உங்கள் வேண்டுதலை முன்வைத்து பிரார்த்தித்து மஹாசிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்போகிறேன் என இறை அருள் வேண்டி, இறை அனுமதி பெற்ற உணர்வோடு மங்கள விளக்கேற்றி உணவருந்தி இறைநினைவுடன் நித்திரைக்குப் போக வேண்டும்.

அடுத்த நாள் அதிகாலை திரிபுண்டம் (3 குறி) அல்லது உத்தூளனம் தரித்து கோயிலாயினும் சரி அல்லது வீட்டிலாயினும் சரி உள்ளச் சுத்தியுடன் சிவமந்திரம் (ஓம் சிவாயநம) செபித்து தோத்திரங்கள் பாடி தூய பக்தியுடன் உள்ளம் உருகிக் கண்ணீர் மல்க இறைவனை வணங்கி மௌனமாக இருந்து தியானம், பிரார்த்தனை என்பன செய்தல் வேண்டும். கூட்டு வழிபாட்டு
திருக்கூட்டத்தாருடன் கூடி (பஜனை) இறைபுகழ் பாடித் துதிக்கலாம். ஆன்மிகப் பெரியார்களின் அருட் சொற்பொழிவுகள் கேட்கலாம். ஓவ்வொரு சாமப்பூசையின்போதும் ஆசார சீலர்களாக தவறாது பூசைகளைக் கண்டு பேரானந்தப் பெருக்கோடு இறை அருள் பெறவேண்டும்.
நித்திரை விழிப்புக்காக சினிமாப் படம் பார்த்தல், சூது விளையாடுதல், களியாட்டங்கள் ஏனைய விளையாடல்கள் எல்லாம் தவிர்க்கப்படவேண்டும். இவைகளைப் பின்பற்றினால் குளிக்கப்போய்ச் சேறு பூசிய உவமானத்திற்குச் சமமாகும். பெரும் பாவமும் ஆகும்.

பொழுதைப் போக்க வேண்டும் என்றால் சிவ சிந்தனையோடு இருக்க வேண்டும். அதற்குப்பல வழிவகைகளை ஆன்மீக ஞானிகள் எமக்கு வழி காட்டி வைத்துள்ளார்கள். ஆலயம் செல்ல முடியாதவர்கள் தங்கள் வீட்டிலுள்ள சுவாமி அறையில் உள்ளத் துhய்மையுடன் இறைவனை வணங்கி ஒரு வெள்ளித் தட்டில் விபூதி பரவி அதற்கு மேல் தெற்பைப்புல்லை எழுது கோலாக்கி ஓம் நமச்சிவாய என்ற சிவமந்திரத்தை (1008) ஆயிரத்தெட்டுத் தடவைகள் எழுதி அதற்குப் பத்திர புஸ்பம் சாத்தி தூப தீபம் கற்பூரத் தீபம் காட்டி வீழ்ந்து வணங்கி அவ்விபூதியைச் சிவசிவ என நெற்றியில் தரித்து ஏனையோர்க்கும் கொடுத்துதவ வேண்டும். இவ்விபூதி இறை சக்தி நிறைந்ததாக மாறியுள்ளது. மருந்து போலப் பேண வேண்டும். நோய் தீர்க்கும் மருந்தாகவும் சிவசிவ எனசொல்லி சிறிதளவு வாயில் போட்டுக் கொள்ளலாம். மிகுதி விபூதியை ஒரு வெள்ளிப் பேழையில் அல்லது பட்டுப் பையில் போட்டு வைத்துக்கொள்ளலாம். இது உடற்பிணி கஷ்ட துன்பங்களைப் போக்கும். மனக்கவலைகளைப் போக்கும் அருமருந்தாகும். மன நின்மதி அற்ற நேரங்களில் நல்ல விஷயங்களாக வெளியில் செல்லும் வேளைகளில் இறைவனை நினைத்து நெற்றியில்பூசி சிறிது வாயில் போட்டால் எல்லாம் வெற்றிகரமாக நடைபெறும். சிவஅனுக்கிரகத்துடன் பேரானந்தம் மனநின்மதி கிடைக்கும். இதுசத்தியம். நம்பிக்கை முக்கியமானது.

மஹாசிவராத்திரியான சிவநிதிப் புண்ணிய காலத்தில் இறை அருட் பெருக்குடன் அருள் ஊட்டப்பட்ட விபூதி அருட்திருநீறாகும். இதன் சக்தியைக் கூறமுடியாது. ரிஷிகள் முனிவர்கள் கண்ட மகா மருந்து.
சிவராத்திரி காலத்தில் வீண் பொழுது போக்காமல் விரதம் இருப்பவர்கள் மேற்காட்டியபடி காலத்தைப் புண்ணிய செயற்பாடாகக் கழிக்கலாம்.

அடுத்தநாள் அதிகாலை நான்காம் சாமப்பூசை கண்டு, ஏழை, எளியவர்களுக்கு இயன்றளவு தானங்கள் கொடுத்து பாறனை முடித்து திருவமுது உட்கொண்டு அன்று பகலும் துயில் கொள்ளாமல் இறைவழிபாடு இறைத்தொண்டுகளில் காலத்தைக் கழித்து இரவாகியதும் சுவாமி அறையில் பூசைமுடித்து சிவராத்திரி சிவவிரதம் பூரண நிறைவு பெற்றதாக எண்ணி திருப்தியுடன் இறைநினைவோடு நித்திரை செய்யலாம். அன்றே நல்ல மங்களகரமான சொற்கனங்கள் (கனவுகள்) காண்பீர்கள். இறைவன் அருட்காட்சியும் வழங்குவார்.

எத்தனையோ அடியார்கள் தங்கள் அனுபவரீதியான பல அற்புத நிகழ்வுகளையும் தங்களின் வேண்டுதல்கள் நிறைவு பெற்றதையும் கதைகளாகக் கூறி சந்தோஷப்படுவார்கள். ஆறுமுகநாவலர் போன்ற பல அறிஞர்கள் மஹா சிவராத்திரியின் மகிமை பற்றிச் சிறப்பாக கூறியுள்ளார்கள். சிவராத்திரி பற்றிய பல கதைகளுமுண்டு.

விரத பலன்

வேண்டுவார் வேண்டுவதை ஈவான் கண்டாய். நாங்கள் எதை விரும்புகிறௌமோ எங்கள் விருப்பப்படி வாழ்வழிக்கும் கருணாமூர்த்தியாகிய சிவபெருமான் வாழ்வழிக்கின்றார். அறியாமை காரணமாகவும் ஆணவச்செருக்கினாலும் பொறாமை வஞ்சகம் சூது என்கின்ற தீய எண்ணங்களும் கொலை, கொள்ளை, களவு, தீவைப்பு இப்படியான பஞ்சமா பாவச் செயல்களைச் செய்து எங்களை அறியாமலே தீய எண்ணங்களை நிரம்பி வாழ்க்கையில் சீரழிந்து அல்லல்படுகின்றோம. நல்லதை நினைத்து நல்லவைகள் பேசி நல்லவற்றைச் செய்தால் நிச்சயமாக எங்களுக்கு வளமான வாழ்வு வழங்குவார் இறைவன். கஸ்டங்கள் துன்பங்களை அனுபவிப்பதற்கு நாங்களே காரணமாகின்றோம். இறைவன் மீது பழிபோடுவது குறைசொல்வது எங்களின் அறியாமையாகும். இறைவன் நல்லவர் கெட்டவர் என்று பாகுபாடு பார்க்காதவர். ஏல்லோருக்கும் சமமாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இதனால் தான் உமாபதி சிவாச்சாரியார் கூறுகின்றார்.

“நலமிலன் நண்ணினர்க்கு நல்லன் சலமிலன் பேர் சங்கரன்”

நாம் நல்ல ஒழுக்கநெறிகளைப்பேணி அன்பு நெறியில் நடந்தால் இறைவனின் அருட்கடாட்சம் கிடைக்கும். வழங்களுடன் சந்தோஷமாக வாழலாம். கெட்டவைகளை நினைந்து இறைவனுக்கு விரும்பாதவைகளைச் செய்தால் இறைவன் அருள்புரியயும் மாட்டார். எந்த விரதங்கள் நோற்றாலும் பயனில்லை. வாழ்வு பூராகவும் கஸ்டங்களும் கவலைகளும் தான் என்று நின்மதியற்ற வாழ்வைத் தான் வாழவேண்டும். எங்களின் உயர்வக்கும் தாழ்வுக்கும் நாங்களே பொறுப்பானவராவோம். ஒழுக்கநெறி, தர்மநெறி, அன்புநெறி, ஆன்மிகநெறி நின்று விரதங்கள் நோற்றால் சகல சௌபாக்கியங்களும் பெற்று இறை அருட்கடாட்சத்துடன் இன்ப வாழ்வு வாழலாம்.

மஹாசிவராத்திரியில் நிகழ்ந்த திவ்ய அருட்செயல்களால் நடைபெற்ற அற்புத நிகழ்வுகள்:
சிவனும் பார்வதியும் ஒரு வில்வமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார்கள். அந்த மரத்தின் மீது ஒரு குரங்கு அமர்ந்திருந்தது. அந்தக் குரங்கு மரத்தினிலிருந்த வில்வம் இலைகளை ஒவ்வொரு இலையாய் பறித்து உமைஅம்மை உடனாய சிவலிங்கத்தின் மீது போட்டுக் கொண்டிருந்தது. நோக்கம் இல்லாவிட்டாலும் சிவராத்திரியன்று வில்வார்ச்சனை செய்த காரணத்தால் அந்தக் குரங்கை இறைவன் மூவுலகங்களுக்கும் முசுகுந்தச்சக்கரவர்த்தியாகப் பிறக்கச் செய்தார் என்பது வரலாற்றுக் கதையாகும்.

எலிகளுக்குப் பிறந்த இடம் கோயில் என்பதை நாம் அறிவோம். ஒரு சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. தீபங்கள் ஏற்றினார்கள். நல்ல பசு நெய்விட்டு விளக்கேற்றி வைத்தார்கள். நள்ளிரவு தாண்டியதும் குருக்கள் கதவைச்சாத்திவிட்டு வீடு சென்றுவிட்டார். திரி எரிந்து மங்கலாகியது. வெளிச்சம் குறைந்து விட்டது. நெய் மணத்தில் ஒர் எலி சென்று விளக்கின்மீது
உரைத்ததும் கூடுபத்திய திரி சுடர்விட்டு பிரகாசித்தது. சிவராத்திரியன்று கோயிலில் அறியாமல் விளக்கைப் பிரகாசிக்கச் செய்த காரணத்தால் அந்த எலியை மறுபிறப்பில் மூவுலகாளும் மகாபலிச்சக்கரவர்த்தியாக ஆக்கி வைத்தார் சிவபெருமான். இன்னும் பல முத்திக் கதைகள் மஹாசிவராத்திரியின் மகிமையை எடுத்துச் சொல்லி இருக்கின்றன.

எனவே மஹாசிவராத்திரி விரதம் ஒரு அருள்மிகு மஹாவிரதமாகும். சிவபெருமானின் திருமுடியும் திருவடிவும் அருளையும் ஞானத்தையும் உணர்த்துகின்றன. அதை அடைவதே முத்திக்கு வழியாகும். சிவபெருமானை அன்பினாலும் உலக உயிர்களுக்குச் செய்யும் தொண்டினாலும் மட்டுமே அடைய முடியும். இந்த தத்துவத்தையே மஹாசிவராத்திரி சுருக்கமாக உணர்த்துகிறது.