வரவேற்கிறோம் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்
EMAIL US AT svs.vinayagar@live.nl
CALL US NOW +31 223 620 313
DONATE NOW

சித்ரா பௌர்ணமி

சித்ரா பௌர்ணமி

சித்ரா பௌர்ணமியின் சிறப்புக்கள்.

பூமியைச் சுற்றிவரும் சந்திரன் பௌர்ணமி அன்று முழு நிலவாகத் தோன்றி மிகப்பிரகாசமாகக் காட்சிதரும். இந்தப் பௌர்ணமி தினமானது மாதம் ஒரு முறை வந்தாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு சில தனிச் சிறப்புக்கள் உள்ளன. சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு? என்ற கேள்வி எம்மிடம் எழுவது இயல்பானதொன்றாகும். சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடிவரும் பௌர்ணமி நாள் சித்ரா பௌர்ணமி நாளாகும்.

சித்திரை நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால், இத்தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதிர் தர்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும், சித்ரா பௌர்ணமியில் பிறந்த சித்திர குப்தர் விரத நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

சித்திரை மாதத்தில் சூரிய பகவான் உச்ச பலம் பெறுகிறார். சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கின்றார். சூரியனை பித்ருகாரன் (தந்தையை நிர்ணயிப்பவர்) என்றும், சந்திரனை மாத்ருகாரன் ( தாயை நிர்ணயிப்பவர்) என்றும் கூறுவர். அதாவது அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்கிறோம்.
சூரியனுக்கு அதிதேவதையாக பரமசிவனையும், சந்திரனுக்கு அதிதேவதையாக பார்வதியையும் வைத்திருக்கின்றார்கள். அமாவாசை, பௌர்ணமி அன்று முறையே சூரிய சந்திர சங்கமத்தையும், சமசப்தமமாக இருப்பதையும் சிவசக்தியின் ஐக்கியம் என்று கூறப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி வரலாறு

தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவபெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களைக் கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் கொடுக்காதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவபெருமான். இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் அவர் சித்திரகுப்தன் எனப் பெயர் பெற்றார்.

சிவபெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுக்க ஆரம்பித்தார் அவர். இப்படி பொறுப்பாகப் பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது.

தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனதுக்குள் ஒரு குறை. அது தங்களுக்கு குழந்தையில்லை எனும் குறைதான். இந்தக் குறையைத் தீர்க்க, இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள். இந்திரனுக்கு நேரடியாக பிள்ளைப்பேறு தர முடியாதே என சங்கடப்பட்ட சிவபெருமான், இந்திரனுக்கு சித்திரகுப்தனை மகனாகப் பிறக்க வைக்கத் தீர்மானித்தார்.

இந்திரனின் அரன்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் சித்திரகுப்தனை புகச்செய்த சிவபெருமான், அந்தப் பசுவுக்கு குழந்தையாகப் பிறந்து, இந்திரனின் குழந்தை பாக்கிய குறையை தீர்த்துவைக்குமாறு கூறினார். இதை இந்திரனுக்கும் எடுத்துரைக்கஇ,எப்படியோ ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என இந்திரனும், இந்திராணியும் சம்மதித்தனர். காமதேனுவுக்கு குழந்தையாகப் பிறந்தார் சித்திரகுப்தர். அவர் சிதிரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் சித்திரா குப்தன் என அழைக்கப்படுகின்றார்.

பௌர்ணமியின் சிறப்பு

சித்ரா பௌர்ணமி பற்றி முதலில் பார்த்தோம். அடுத்து கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று சூரியன் கார்த்திகை மாதத்திலும், சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பார். அன்று சந்திரன் உச்ச பலன் பெறுவார். மற்றும் சில பௌர்ணமிகளுக்கு சிறப்புகள் உள்ளன. வைகாசி மாதம் வரும் பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் வரும். அன்று முருகக் கடவுள் அவதரித்த தினமாகும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். அது பரமசிவனின் திரு நட்சத்திரமாகி, ஆருத்ரா தரிசனம் காண பாபங்கள் தொலைந்துவிடும். அன்று ஆனந்த நடனமாடுகிறார் நடராஜப் பெருமான். அபஸ்மாரம் என்னும் முயலகனை தனது திருவடிகளால் மிதித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீநடராஜரை வழிபட்டால் அபஸ்மாரம் என்னும் காக்காய் வலிப்பு நோய் குணமாகும் என்பது ஓர் “சிதம்பர ரகசியம்”.

தை மாதத்தில் பௌர்ணமி பூசம் நட்சத்திரத்தில் வரும். அன்று செய்யும் முருக வழிபாட்டிற்கு ஈடு இணை இல்லை. மாசிமாத பௌர்ணமி மக நட்சத்திரத்தில் வரும். அன்று அம்பிகையை வழிபட தேவியின் பூரண அருள் கிட்டும். பங்குனிமாத பௌர்ணமி உத்தர நட்சத்திரத்தில் வரும். அன்று திருச்செந்தூரில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக ஸ்ரீவள்ளி – ஸ்ரீமுருகன் திருமணம் நடப்பதைப் பார்ப்பவர்கள் மறுபிறவி எய்தார் என்பது உண்மை.

இத்தகைய சிறப்புக்களை உடைய சித்ரா பௌர்ணமி அனைத்து திருக்கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகிறது.